ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக உள்துறை செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பிலும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரை, தமிழக ஆளுநரின் பரிசீலினையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என தெரிவித்துள்ள தமிழக அரசு, ஆயுள் கைதிகள் தங்களை முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது என்று கூறியுள்ளது.
மேலும், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு போன்ற மாநில அரசு அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது என்றும், முன் கூட்டி விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கும்படி மட்டும் அரசுக்கு உத்தரவிட முடியும் என விளக்கமளித்துள்ளது.
அத்துடன்நளினியை முன் கூட்டி விடுதலை செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப்பையா, சரவணன் அமர்வு, வழக்கை ஆகஸ்ட்20 தேதிக்கு தள்ளி வைத்தனர்.