பிரதமர் மோடியை சாகச பயணத்திற்கு அழைத்துச் சென்றது தனது பாக்கியம் : பியர் கிரில்ஸ்

டிவி நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடியை சாகச பயணத்திற்கு அழைத்துச் சென்றது தனது பாக்கியம் என்று பியர் கிரில்ஸ் கூறியுள்ளார்.டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் Vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ்.

 

காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார்.இந்நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து ஏற்கெனவே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவில் பசுமையான காடுகள், அரிய வகை உயிரினங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவை உள்ளன. இந்த நிகழ்ச்சியை பார்த்தால் இந்தப் பசுமையான பகுதியை நேரில் பார்க்க ஆசை வரும். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் தெரியவரும். இந்தியா வந்து இந்த நிகழ்ச்சியை எடுத்ததற்கு பியர் கிரில்ஸிற்கு நன்றி’ எனப் பதில் பதிவு செய்திருந்தார்.

 

அதற்கு கிரில்ஸ் தனது பக்கத்தில், ‘உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் பயணித்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நமது முக்கிய நோக்கமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நமது பூமியின் பாதுகாப்பு உலகங்கெங்கும் பரவட்டும்’ என்று பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட ‘மேன் Vs வைல்ட்’ குறித்து பியர் கிரில்ஸ் மீண்டும் பேசியுள்ளார்.  ‘இந்தியாவின் நீண்டகால ரசிகன் நான். ‘மேன் Vs வைல்ட்’ சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர். சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தவே பிரதமர் மோடி, ஒபாமாவை சாகச பயணம் அழைத்துச் சென்றேன். சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் ஆழ்ந்த அக்கறை இருந்ததால் என்னுடன் சாகச பயணம் செய்தார் மோடி.

 

ஒரு இளைஞரைப் போன்று காட்டில் மோடி நேரத்தை செலவிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. மழையில் நனைந்தபோதும், ஆற்றில் தார்ப்பாய் படகில் சென்றபோதும் புன்னகையுடன் இயல்பாக இருந்தார்’ என்றார் கிரில்ஸ்.


Leave a Reply