காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் ராகுல் பெயரையே முன்மொழிந்துள்ளனர்

ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராக பதவியில் தொடர வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து மண்டல பிரிவு நிர்வாகிகளும் அதன் செயற்குழுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாமல் போனது. இதை அடுத்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தலைவர்கள் தனக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

இதையடுத்து தனது தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாத நிலை நீடித்து வருகிறது.நிர்வாகிகள்
கருத்து இதனிடையே புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் செயற்குழு டெல்லியில் இன்று கூடியது. இதில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலம், வடக்கு, வடகிழக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய ஐந்து மண்டலங்களின் நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த தெற்கு மண்டல நிர்வாகிகள் மட்டுமின்றி அனைத்து மண்டல நிர்வாகிகள் ஒருமித்த குரலில் ராகுல் காந்திதான் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.

 

ராகுல் காந்தி, தனது ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. முகுல் வாஸ்னிக் போன்ற, காந்தி குடும்பத்தை தவிர்த்த வேறு ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில், இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் மீண்டும் ராகுல்காந்தி பெயரையே நிர்வாகிகள் முன்மொழிந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில், முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதேநேரம் பிரியங்கா காந்தி, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று, தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். இன்று இரவு 9 மணிக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply