கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மகாராஷ்திரா மற்றும் ஆந்திர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் கோதாவரி நதியில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டுள்ளது.
பேரிரைச்சலுடன், கோதாவரி ஆற்றில் தண்ணீர் பொங்கி பிரவாகம் எடுப்பதால், மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கோதாவரி ஆற்றில், வினாடிக்கு ஒன்பதரை லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் பாய்ந்து, வங்க கடலில் கலந்து வருகிறது. கோதாவரி ஆற்றில், அபாய அளவை விட, 2 மீட்டர் உயரத்திற்கு மேல், வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது.

மேலும், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பெய்யும் கனமழையால், 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரில் மிதக்கின்றன.மேலும் போக்குவரத்து மற்றும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.கிராம மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீரில் மூழ்கிய கிராமங்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 நஷ்டயீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவினால் விவசாயிகளும் கிராம மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.






