நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் உயிரிழந்தோருக்கு உடனடியாக 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் – வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் உயிரிழந்தோருக்கு உடனடியாக 4 லட்சம் ரூபாய் அரசு வழங்க உள்ளது எனவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க மாவட்ட நிர்வாகம் முகாம்களை ஏற்படுத்தி உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் உதகையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

 

கடந்த ஒருவாரமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இந்த இரண்டு நாட்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை மாவட்ட நிர்வாகம் துரிதமான நடவடிக்கையில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான கூடலூர் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை துரித நடவடிக்கையில் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மாவட்ட அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,படிப்படியாக மழையின் அளவு குறைந்த பின் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்ததோடு கனமழையால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 4 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்தார்.


Leave a Reply