திருப்பூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் செம்மர கடத்தல்! உறக்கத்தை கலைக்குமா உளவுத்துறை!!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடைத்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவில் தடம் பதித்து தற்போது ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணி ஈட்டிதரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் இத்தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் திருப்பூரில் இயங்கி வரும் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் கண்டெய்னர் மூலமாக திருப்பூரில் இருந்து துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். மேலும் உழைப்பை மூலதனமாக கொண்டு இயங்கி வரும் திருப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் ஊடுருவி கண்டெய்னர் மூலமாக சுமார் 5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தி பிடிபட்ட விவகாரம் தற்போது திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

நாட்டையே அதிர வைத்த செம்மரக்கடத்தல் தற்போது திருப்பூரிலும் பரவியிருப்பது குறித்து தொழில் துறையினரிடையேபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி திருப்பூரில் இருந்து கண்டெய்ணர் மூலமாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலணாய்வு இயக்குநரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் பாதையில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது பழங்கள் காய்கறிகள் மத்தியில் செம்மரல்கட்டைகளை வைத்து கடத்துவது தெரியவந்தது.
இதனிடையே கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த வருவாய் புலணாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடத்தல் சம்பவத்தில் முமாரக்(47), கண்ணன் @ கார்த்திக்(25), உதுமான் பரூஃ(33), சையது அப்துல் காசிம்(36), அப்துல் ரஹ்மான்(39), மற்றும் தமீம் அன்சாரி(36) ஆகிய 6 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இதனை அடுத்து திருப்பூரை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் உள்ள குடோனில் செம்மரக்க்கட்டைக்கள் பதுக்கி வைத்து கடத்தப்படுவது தெரிய வந்தது. இதனை அடுத்து அதிரடியாக அங்கு சென்ற அதிகாரிகள் அங்கு வைக்கப்படிருந்த சுமார் 9.46 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி, இரண்டு கார்கள் மற்றும் சுமார் 5 கோடி மதிப்பிலான 11.46 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து கோவைக்கு எடுத்துசென்றனர்.
மேலும் நடைபெற்ற விசாரணையில் மேலும் இரண்டு முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததை அடுத்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய வருவாய் புலணாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைக்கள் 4 நாட்கள் கழித்தே உளவு பிரிவு போலீசாரின் கவனத்திற்கு வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் போன்ற ஏற்றுமதி தொழில் சார்ந்த நகரங்களில் வெளிநாட்டவர்கள் அதிகம் வந்து செல்லும் நிலையிலும், பின்னலாடை தொழிலில் ஈடுபடுவது போன்று ஊடுருவி இது போன்ற கடத்தலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. மேலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள செம்மரக்கடத்தல் எத்தனை நாட்களாக நடக்கிறது என்பது கேள்விகுறியாகியுள்ளது.
பிடிபட்ட கடத்தல் பொருட்கள் உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரியவே 4 நாட்கள் ஆகிறது எனவே தற்போதைய சூழலில் போலீசாருக்கும் உளவு பிரிவிற்கும் எந்த ஒரு வித்யாசமும் தெரியவில்லை என தெரியவருகிறது. இதனால் பல்வேறு குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிப்பதில் தொய்வு ஏற்படுவதோடு தொழிலில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது.
எனவே உளவு பிரிவு போலீசார் உறக்கத்தை கலைத்துவிட்டு திருப்பூர் போன்ற சர்வதேச ஏற்றுமதி நகரின் பாதுகாப்பை பலப்படுத்த முழு வீச்சில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனதே பொதுமக்கள் மற்றும் தொழில்துறையின் கோரிக்கையாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




