தமிழகத்தில் நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று பிரதமரிடம் மதிமுக பொதுச் செயலரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ திங்கள்கிழமை நேரில் வலியுறுத்தி மனு அளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை வைகோ சந்தித்தார். அப்போது, திருக்குறளின் தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைத் தந்து, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர், பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும். அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக் கூடாது. கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டக் கூடாது.காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கச் செய்யும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும். கர்நாடகத்தில் மேக்கே தாட்டுப் பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அப்போது, ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைகள் தொழில் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வைகோவிடம் பிரதமர் உறுதி அளித்ததாக மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.