வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை (ஆக. 3) மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பிரசாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்கிறது.
பிரசாரம் ஓய்ந்த பிறகு தேர்தல் தொடர்பான எந்தப் பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் குறித்த படங்களை பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்கச் செய்வதற்காக இசை நிகழ்ச்சியையோ, பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையோ நடத்தக் கூடாது.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தொகுதியில் இருந்து சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியேறி விட வேண்டும். வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றமாகும்.
வேட்பாளர்கள் சார்பில் தற்காலிக பிரசார அலுவலகத்தை ஒவ்வொரு வாக்குச் சாவடியில் இருந்தும் 200 மீட்டர் தொலைவில் அமைக்கலாம். இதில் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.