வாட்ஸ்அப் மூலம் தலாக் கூறி மனைவிக்கு விவாகரத்து கொடுத்த குற்றச்சாட்டில் கணவன் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் தானே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முஸ்லிம் பெண்களில் ஒருசிலர் அவர்களின் கணவர் முத்தலாக் மூலம் விவகாரத்து கொடுப்பதால் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
அப்போது முத்தலாக் என்பது சட்ட விரோதம். இதை தடுப்பதற்கு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.கடந்த வாரம் வியாழக்கிழமை மக்களவையிலும், இந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையிலும் முத்தலாக் மசோதா நிறைவேறியது. அதன்பின் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவர் வாட்ஸ்அப் மூலம் தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், கடந்த 2015-ல் இருந்து 2018 வரை மாமியார், கணவரின் சகோதரி வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினர்.
கணவர் போன் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் தலாக் கூறி விவாகரத்து கொடுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.இதனால் போலீசார் அவரது கணவர் மீது முத்தலாக் சட்டத்தின் 4-வது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்தாலும் போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.