போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் பெரும் நஷ்டம் ! பொதுமக்களுக்கு தினமும்  கஷ்டம்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் புறக்கணிப்பதால் சர்கார் பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

திருப்பூர் ஈரோடு மார்க்கமாக செல்லும் ஊத்துக்குளி ரோட்டில் 10 வது கி.மீட்டரில் சர்கார் பெரியபாளையம் பஸ்ஸடாப் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன வரலாற்று புகழ்பெற்ற, மிகவும் பழமை வாய்ந்த சுக்ரீஸ்வரர் கோவிலும் உள்ளது.இக்கோவிலுக்கு வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விஷேச நாட்கள் தவிர பிறநாட்களிலும் வந்து செல்கின்றனர்.

 

தற்போது ஆடிப்பெருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் வெளிமாவட்டத்திலிருந்தும் வந்து செல்கின்றனர். மேலும் சர்கார் பெரியபாளையம் ஊராட்சியை ஒட்டி பல்வேறு நகர்கள் புதிதாக உருவாகி வேகமாக விரிவடைந்து வருகிறது.

மேலும் 50க்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகள், சாய ஆலைகள், சலவைப்பட்டறைகள் சிறுகுறு ஜாப்ஒர்க் நிறுவனங்களும் நாளுக்கு நாள்விரிவடைந்து வருகின்றது பனியன் நிறுவனங்களில் பனியாற்றும் தொழிலாளர்கள் ஈரோடு, பெருந்துறை, விஜயமங்கலம், ஊத்துக்குளி உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்தும் தினமும் வந்து செல்கின்றனர்.

 

இதனால் பகல் நேரங்களில் எப்போதும் இந்த பஸ்நிறுத்தம் பகுதியில் கூட்டம் அதிகம் இருக்கும். ஆனாலும் பயணிகள் நிறுத்தத்தில் நின்று ஈரோடு செல்லும் பஸ்களைகைாட்டி நிறுத்தினாலும் நிறுத்தாமல் சென்று விடுகின்றன, ஒருசில தனியார் பஸ்களும், டவுன் பஸ்களும் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் பயணிகள் மணிக்கணக்கில் பஸ்ஸிற்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

 

இது தவிர ஈரோடு, சேலம் செல்ல விரும்பும் பயணிகள் பெரும்பாலும் டவுன்பஸ்களில் ஊத்துக்குளி சென்று அங்கிருந்து ஈரோடு செல்லவேண்டிய அவலம் உள்ளது.  பயணிகள் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்சில் சர்கார் பெரியபாளையம் செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். அப்படியே அவசரத்திற்கு பஸ்சில் ஏறினாலும் ஒரு சில கண்டக்டர்கள் வலுக்கட்டாயமாக பாதிவழியில் கீழே இறக்கி விடுவதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் மக்கள் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அரசு பேருந்துகள் சர்கார் பெரிய பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

இது குறித்து பயணிகள் கூறுகையில், சர்கார் பெரிய பாளையம் பஸ் நிறுத்தத்தில் திருப்பூர், ஈரோடு சேலம் செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்ல அனுமதி இருந்தும் இந்த வழி தடத்தில் செல்லும் அரசு பஸ்கள் நிற்பதில்லை. இதனால் அவசர தேவைக்கு செல்ல வேண்டிய ஊருக்கு செல்ல முடியாமல் போகிறது. மணி கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

அரசு உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் பயண்பாட்டிற்காக பணியாற்றாமல், போக்குவரத்து கழகத்திற்கு நஸ்டத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் அரசுபஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.