கர்நாடகா சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார்

கர்நாடகா சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில், நேற்று மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏ,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், இம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. மஜத தலைவர் குமாரசாமி முதல்வர் பதவியை வகித்தார். மக்களவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை தொடங்கியது.

 

அக்கட்சி மறைமுகமாக நடத்திய ‘ஆபரேஷன் தாமரை’ நடவடிக்கையால், காங்கிரஸ் மற்றும் மஜத.வை சேர்ந்த 18 அதிருப்தி எம்எல்ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.அதன் பிறகு, பாஜ.வின் பாதுகாப்பில் அவர்கள் அனைவரும் மும்பை சென்று சொகுசு ஓட்டலில் தங்கியிருந்தனர். இவர்களில் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி ராஜினாமாவை வாபஸ் பெற்றதால், அதிருப்தி எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது.

 

இந்த எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவால், குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. சட்டப்பேரவையில் கடந்த 23ம் தேதி அவர் கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். அவருக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிர்த்து 105 வாக்குகளும் கிடைத்தன. இதனால், முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகா பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் இன்று அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

இந்நிலையில், கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 17 பேரில், 3 பேரை தகுதி நீக்கம் செய்து 2 நாட்களுக்கு முன் சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக உத்தரவிட்டார். மற்ற 14 அதிருப்தி எம்எல்ஏ.க்களின் ராஜினாமா மீது விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

 

கர்நாடகா சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இதில், எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதுபோன்ற நிலையில், 14 அதிருப்தி எம்எல்ஏ.க்களின் பதவியை சபாநாயகர் பறித்து இருப்பது, கர்நாடகா அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததும், சபாநாயகர் ரமேஷ் குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கு வாய்ப்பு தராமல், அதற்கு முன்பாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ”சபாநாயகராக நானே தொடர்வேன்,” என்று அவர் அறிவித்து இருக்கிறார். இதனால், கூடுதல் பரபரப்பு நிலவுகிறது.


Leave a Reply