மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் வரும் 30 ஆம் தேதி ஆடிக்குண்டம் திருவிழா

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா வரும் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.அதற்காக தடுப்புகள்,கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் வற்றாத ஜீவநதியான பவானி ஆற்றங்கரையோரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

 

இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதன் ஒரு பகுதியாக இந்தாண்டும் வரும் ஆடி ஆடி 14 அதாவது ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை திருக்குண்டம் இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது.ஆடிக்குண்டம் திருவிழாவானது வரும் ஆடி 12 அதாவது ஜூலை 28 ஆம் தேதி ஞாயிறன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

அன்று மாலை அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். அதற்கடுத்த நாளில் மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறக்கும் நிகழ்வும்,அடுத்த நாள் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை அம்மன் அழைப்பும்,அதனை தொடர்ந்து திருக்குண்டம் இறங்குதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.அடுத்தடுத்த நாட்களில் ஆடி அமாவாசை,மாவிளக்கு,பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, பரிவேட்டை, வானவேடிக்கை நிகழ்வும் நடைபெற உள்ளது.

 

ஆடி 21 ஆம் தேதி மறுபூஜையுடன் ஆடிக்குண்டம் திருவிழா நிறைவு பெற உள்ளது.இத்திருவிழாவில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்,பக்தர்கள் தங்கும் வசதி, குடிநீர், தீயணைப்புத்துறையினர், 24 மணி நேர மருத்துவ வசதி,தடுப்புகள்,கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவற்றிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

மேலும்,திருவிழா காலங்களில் பக்தர்கள் அருகில் உள்ள பவானி ஆற்றில் குளித்து விட்டு கோவிலுக்கு வருவர்.எனவே,பவானி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் பொருட்டு பில்லூர் அணையிலிருந்து மின் உற்பத்திக்காக மின்வாரியம் தண்ணீரை திறந்து விடும் பொழுது கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,இக்கோவிலில் ராஜகோபுரம் அமைப்பதற்காக பணி மந்த கதியில் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் பாதியில் நின்றுள்ளது.இதன் காரணமாக வரும் ஆடிக்குண்டம் திருவிழாவில் பக்தர்களின் கூட்ட நெரிசல் அதிகரிக்கும்.இதனால் தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் உள்ளது.

 

இதனை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும்,நகை திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாவண்ணம் கூடுதல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் அதற்கேற்ப கூடுதல் காவலர்களையும் நியமிக்க வேண்டும் எனவும்,திருவிழா நேரத்தில் கோவை,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஆவண செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply