வீடுகளுக்கு சமையல் எரிவாய் சிலிண்டர் கொண்டு வரும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் பரவலாக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
சிலிண்டரை வீடுகளுக்குக் கொண்டு வரும் ஏஜென்சி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதலாக ரூ.30 அல்லது ரூ.50 கேட்டுக் கட்டாயப்படுத்திப் பெறும் வழக்கம் ‘தொன்றுதொட்டு’ இருந்து வருகிறது. இந்த ‘டிப்ஸ்’க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள், மறுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுமென்றே சிலிண்டர் சப்ளையை தாமதம் செய்யும் போக்கும் இருந்து வருகிறது.
இதனையடுத்து வாடிக்கையாளர்கள் புகார்கள் பல எண்ணெய் நிறுவனங்களுக்கு வரத் தொடங்கின.எனவே இனி பாயிண்ட் ஆஃப் சேல் கருவி மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முறை அமலுக்கு வரவிருப்பதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலைஇல் பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்குக் கூறும்போது, ‘எல்.பி.ஜி சிலிண்டர் டெலிவரி செய்யும்போது ஏஜென்சி ஊழியர்களுக்கு கூடுதலாக எந்த ஒரு தொகையையும் அளிக்க வேண்டியதில்லை. சிலர் விருப்பப்பட்டு கொடுத்தால் சரி, ஆனால் அனைவரிடத்திலும் இதை ஏதோ கட்டாயமாக்கி வருதல் தொடர்ந்து வருவதால் புகார்கள் எழுந்துள்ளன.
இதைத் தவிர்க்கவே இணையதளம் வாயிலாக சிலிண்டர் பதிவு செய்யும் முறையைக் கொண்டு வந்தோம், தற்போது டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் வசூலிக்கும் வகையில் பாயிண்ட் ஆஃப் சேல் கருவியை ஏஜென்சிகள் கொடுத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் உரிய தொகையை கொடுத்தால் போதும்’ என்றார்.