விவசாயிகளை அனைத்து வகையிலும் நசுக்குகிறது மத்திய அரசு – கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்

உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்கிற மத்திய அரசின் முடிவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

 

இது கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகளை அனைத்து வகையிலும் மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளை கொதிப்படைய செய்துள்ளது.வருகின்ற 22, 23 ம் தேதிகளில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி ஜந்தர்மந்தரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவை என்கிற விதியை மாற்றக்கூடாது.பழைய மின்னழுத்த கோபுரங்களுக்கு வாடகை தீர்மானிக்க வேண்டும். மின்சாரத்தை புதைவட தடமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு.

 

மின்சாரம் கொண்டு செல்லும் முறை நவீனப்படுத்த வேண்டும். மத்திய அரசின் இந்த செயல் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதற்கு சமம். அனைத்து வகையிலும் விவசாயிகளை நசுக்கும் மத்திய அரசின் முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

தமிழக எம்.பி.க்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். டெல்லியில் துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்து இம்முடிவை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துவோம் என்று அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.


Leave a Reply