தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் -2 ஏவப்படுவது தள்ளிவைப்பு

Publish by: --- Photo :


நிலவின் தென் துருவ பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக விண்ணில் ஏவப்பட இருந்த சந்திராயன் 2 விண்கலம் இறுதி நேரத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து சந்திராயன்2 விண்கலம் ஜி‌எஸ்‌எல்‌வி 3 ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவப்பட இருந்தது. நிலவின் மேல் சுற்றுப்பாதையில் மட்டும் இல்லாமல் நிலவின் உட்பகுதிகளிலும் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு பிரத்யேகமாக இந்த விண்கலமானது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

 

குறிப்பாக உலக நாடுகளில் வேறு எந்த நாடுகளும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியை இந்தியா மேற்கொண்டு இருப்பதாக பரவலாக புகழப்பட்டு வந்த நிலையில் தான் விண்ணில் ஏவப்படுவதற்கு சரியாக ஒரு மணி நேரத்திற்கும் முன்னதாகவே அவை நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது போன்ற தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விண்ணில் ஏவப்படுவதற்கு கடைசி நிமிடத்தில் அவை நிறுத்தப்பட்டு இருக்கிறது என்பது போன்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, நிரப்பப்பட்டிருந்த எரிபொருள்களில் இறுதி கட்டத்தில் ஏற்பட்ட கசிவின் காரணமாகதான் அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

இந்த நிகழ்வு என்பது தற்காலிக பின்னடைவு மட்டுமே, நிரந்தர தோல்வி என்று கூற முடியாது. மேலும் இந்த தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு மற்றொரு தேதியில் இது விண்ணில் ஏவப்படுவதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.


Leave a Reply