கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்கு கோவையின் பல்வேறு பகுதிகள்,நீலகிரி,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அவசர சிகிச்சை மேற்கொள்ள ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றனர்.பாதுகாப்பு பணியில் காவல் துறையினரும்,தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கடந்த வியாழன்று மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுடலைக்குட்டி என்ற பாதுகாவலர் மருத்துவமனை வளாகத்திற்குள் பாதுகாப்பின்றி சுற்றித்திரிந்த சிறுமி நந்தினி (வயது 18) மீட்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர்,காவல் துறை ஆணையர் சுமித் சரண் உத்தரவின்படி சிறுமியின் பெயர் மற்றும் முகவரியை வைத்து காவல் துறையின் நவீன CCTNS கணினி பதிவேடுகளில் தேடிய போது சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் காணாமல் போனதாக தாய் அன்பு இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுமியின் பாட்டி புகார் கொடுத்திருப்பதும், சிறுமி நந்தினி தாயை இழந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அதனையடுத்து விரைந்து செயல்பட்ட ரேஸ்கோர்ஸ் போலீசார் சிறுமியை அவரது பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
தகுந்த நேரத்தில் சிறுமி நந்தினிக்கு உதவி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உதவிய தனியார் பாதுகாவலரை கோவை சிட்டி கமிஷனர் சுமித் சரண் இன்று நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் சுற்றித்திரிந்த சிறுமியை மீட்டு காவல் துறையினரிடம் தனியார் பாதுகாவலர் ஒப்படைத்த சம்பவம் பொது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வோம்.