இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் நகராட்சியில் மனிதனின் கழிவுநீரை எந்தவித உபகரணங்கள் இன்றி அகற்றும் அவல நிலைக்கு தள்ளப்படும் நகராட்சி ஊழியர்கள் ! இந்தியாவில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனித கழிவுகளை மனிதர்களே தான் இன்றும் அகற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படும்போது மட்டும் அதனை பற்றி பேசிவிட்டு பின்னர் அதனை விட்டுவிடுகிறோம்.
லட்சம் கோடிகளில் பட்ஜெட் போடுகிறோம், ஆயிரம் கோடிகளில் விண்வெளிக்கு செயற்கைகோள்களை பறக்கவிடுகிறோம், போருக்காக பல்லாயிரம் கோடிகளில் ஆயுதங்களை வாங்கிக்குவிக்கிறோம், கடன் வாங்கி திருப்பி கட்டாதவர்களின் கடன்களை ரத்து செய்கிறோம். ஆனால் மலம் அள்ளும் நிலை இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம் பின்புறம் தான் இந்த அவல நகராட்சி ஊழியர்கள் மூலம் அரங்கேற்றம் நடைபெற்றுள்ளன.
மனிதர்களின் கரங்களுக்கு ஒரு மாற்று தேட மறுக்கிறோம். கழிவுகளை அகற்ற ரோபோ இருக்கிறது ஆனால்?
சாக்கடை சுத்தம் செய்யும் இயந்திரம் அண்மையில் கூட கும்பகோணம் நகராட்சியில் சாக்கடையை சுத்தம் செய்வதற்கு ரோபோ பயன்படுத்தப்படுவதாக செய்தி வெளியானது, கேரளாவிலும் கூட பாதாள சாக்கடையை சுத்தம் செய்திட ரோபோக்கள் பயன்படுத்தப்படப்போவதாக செய்திகள் வந்தன. உண்மையிலேயே இந்த இடங்களில் முற்றிலுமாக ரோபோதான் பயன்படுத்தப்படுகிறதா என்பது சந்தேகமே.
அத்தனையும் தாண்டி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் இவை ஏன் கொண்டுசெல்லப்படுவது இல்லை? நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் குறைந்தபட்சம் கையுறைகளை கூட போடாத நபர்கள் தானே கழிவுகளை அகற்றுகிறார்கள். இவை தடுக்கப்படுவது எப்போது? ஏன் இவர்களின் சாவு நமக்கு வலிப்பதில்லை?நமது வீட்டில் தண்ணீர் ஊற்றும் போது அடைத்துக்கொள்ளாமல் சென்றால் போதுமானது, சாலையில் சாக்கடை நீர் கசியாமல் அது நம் மீது படாமல் இருந்தால் போதுமானது.
மற்றபடி, சக மனிதன் ஒருவன் தன்னுடைய உடல் முழுவதையும் சாக்கடைக்குள் நுழைத்து கழிவுகளை அகற்றுகிறானே என்ற கவலை நான் உட்பட மக்களுக்கு அவசியமில்லாததாகிவிட்டது. ஆட்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க வேண்டும், மிகப்பெரிய விவாதமாக மாறுகின்ற பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், பேருந்து நிழற்குடை கட்ட வேண்டும், போட்ட சாலையை திரும்ப திரும்ப போட வேண்டும், மானியங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும், அனைத்தும் இருக்கும் மக்களுக்கு இலவசம் வாரி வழங்கிட வேண்டும்.
இவை தானே இப்போது நடக்கின்ற விசயங்கள். மற்றபடி, கழிவுகளை அகற்றுகிறவர்களுக்கு இயந்திரம் கொடுப்பது, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொடுப்பது அடிப்படையான விசயமென்பது புரிவதில்லையே ஏன்?பகுத்தறிவு மாநிலம், கல்வி கற்றவர்கள் அதிகம் வாழுகிற மாநிலம், இந்தியாவிற்கு வருமானம் ஈட்டித்தரும் முன்னனி மாநிலங்களில் ஒரு மாநிலம் என பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் தமிழகம் சாக்கடை சுத்தம் செய்யும் பணியாளர்கள் இறப்பு பட்டியலில் முதலிடம் வகிப்பதென்பது மிகவும் கவலைப்படவேண்டிய விசயம்.