அங்கீகாரம் இல்லாத போலி டிராவல்ஸ் நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த டி டேக் சங்க கூட்டத்தில் தீர்மானம்

அங்கீகாரம் இல்லாத போலி டிராவல்ஸ் நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது என கோவையில் நடைபெற்ற டி டேக் சங்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கீகாரம் இல்லாத சுற்றுலா நிறுவனங்களிடம் பொது மக்கள் பணம் செலுத்தி ஏமாறுவதும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கோவையை தலைமையிடமாக கொண்டு டி டேக் எனப்படும் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் அசோசியேசன் ஆப் கோயமுத்தூர் எனும் சங்க துவக்க விழா அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக மோகன்ராஜ்,இபின் மற்றும் விக்னேஷ் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.விழாவில் அரசு வழக்கறிஞர் தாமோதரன்,சிறப்பு அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் மற்றும் வட்டா போக்குவரத்து ஆய்வாளர் அப்சல் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் தலைவர் மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர்,வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதன் அவசியத்தை மாணவர்களுக்கு கூறும் விதமாக அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த உள்ளதாகவும்,வெளி மாநில சுற்றுலா பேருந்துகள் நகரில் அனுமதி இல்லாமல் வருவதை வரைமுறை படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் குறிப்பாக போலியான சுற்றுலா நிறுவனங்கள் நடத்தி பொதுமக்களை ஏமாற்றுபவர்களை கண்டறிந்து சுற்றுலா நிறுவன தொழிலை மேம்படுத்த அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டு கொண்டார்.விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply