மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊழல் ! தேர்வு எழுதாமலேயே மாணவர்களுக்கு சான்றிதழ்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு பட்ட படிப்பு சான்றிதழ் வழங்கிய மோசடி அம்பலமாகியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் தொலைநிலைக்கல்வி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 99 பயிற்சி மையங்களும், வெளி மாநிலங்களில் 132 பயிற்சி மையங்களும், வெளி நாடுகளில் 17 பயிற்சி மையங்களும் செயல்படுகின்றன. இந்த நிலையில் தொலைநிலைக்கல்வியில் ஊழல் நடைபெறுவதாக விஜிலன்ஸ் ஊழல் கண்காணிப்பு இயக்குனகரத்திற்கு புகார் சென்றுள்ளது.

 

இதையடுத்து பல்கலைக்கழக கூட்டத்தில் விஜிலன்ஸ் ஊழல் கண்காணிப்பு இயக்குனகரம் விசாரணை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தான் புகாரில் உள்ள அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 4 பருவங்களில் எந்த ஒரு ஆவணமும் இன்றி 5,058 மாணவர்கள் இளங்கலை கல்வியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 80 சதவீத மாணவர்கள் பணம் கொடுத்து போலியாக சான்றிதழ் பெற்று உள்ளனர்.

 

இதே போல் கேரளாவில் இயங்கும் 4 பயிற்சி மையங்கள் வழியே தொலைநிலைக்கல்வி அலுவலகர்களின் உதவியோடு 500 மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் தலா ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பாதுகாப்பு துறை தலைவர் முரளி கோரிக்கை வைத்து உள்ளார்.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் துணை வேந்தர் கிரிஷ்ணன் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய 3 பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.


Leave a Reply