வாழ்வியலை மேலும் அழகாக்கவும், தகவல்களை விரைவாகவும், எளிதாகவும், கடத்துவதற்காகவும் பயன்படுகின்றனவை எலக்ட்ரானிக் எனப்படும் மின்னணு சாதன பொருட்கள். ஊழல் முறைகேடுகளை, தவறான செயல்களை அம்பலபடுத்தும் ஸ்டிங் ஆப்பரேசன் போன்றவற்றிற்காக பேனா கேமரா பயன்படுத்தப்படுகிறது. தவறானவர்களை பதற்றப்பட வைக்கும் பேனா கேமராவை தனது பதவியின் கண்ணியத்திற்கும், மனித குல மாண்பிற்கு எதிரான செயலுக்கும் பயன்படுத்தி மாட்டிகொண்டு பொறிக்குள் மாட்டிக்கொண்ட எலி போல் போலீஸிடம் வசமாக சிக்கி இருக்கிறார் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஒருவர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் இயற்கை எழில் கொஞ்சும் நான்கு மலைகளுக்கு இடையே அமைந்து இருக்கிறது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். ஆடி, அமாவாசை உள்ளிட்ட அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இவ்வாறு பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி கடந்த மாதம் 28 ஆம் தேதி,வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று உள்ளது.
இதில் பெண் அதிகாரி உள்ளிட்டோர் பணியாற்றி உள்ளனர். அன்றைய நாள் இரவு அந்த பெண் அதிகாரி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான தங்கும் அறையில் தங்கியுள்ளனர்.மறுநாள் காலையில் அறையில் உள்ள குளியலறையில் குளித்த பின் அந்த குளியலறைக்குள் பேனா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தைரியமான அந்த பெண் அதிகாரி பேனா கேமரா யாருடையது என்பது குறித்து ஒவ்வொருவரையும் விசாரித்து உள்ளார். இறுதியில் அந்த பேனா கேமரா இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பச்சையப்பனுக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.
அந்த பேனா கேமராவை எடுத்து சென்று தனது வீட்டில் வைத்து பெண் அதிகாரி பார்த்துள்ளார். அதில் தான் குளிக்கும் காட்சி அந்த பேனா காமிராவில் படம் பிடிக்கப்பட்டு பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியின் எல்லைக்கு சென்றார் பெண் அதிகாரி. இந்து சமய அறநிலையத்துறை மண்டல விசாகா கமிட்டியிலும், மதுரை சரக டிஜிபி யிடமும் புகார் அளித்து இருக்கிறார். இதன் படி இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் மீது போலீசார் புதன் கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.