மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் கலந்து காணப்படுகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். இராண்டாவது கட்டம் மூலமாக மாநில அரசுகளின் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அறிவிப்பு தமிழகத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றும் பழனிசாமி கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களுக்கு கசப்பையும், கார்பரேட் நிறுவனங்களுக்கு இனிப்பையும் அளித்துள்ளதாக விமர்சித்து உள்ளார். தமிழகத்திற்கு என ஒரு திட்டம் கூட அறிவிக்கப்படாததற்கும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் வளர்ச்சி என்ற போர்வை போர்த்தி மூடப்பட்டு இருந்தாலும் மத்திய பட்ஜட்டில் வரிச்சுமை அதிகமாகி உள்ளதாக கூறினார்.
வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் என மக்களின் கோரிக்கை இந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் மத்திய அரசின் பட்ஜட் கவலையையும், அச்சத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்து உள்ளார். வேலை வாய்ப்பு, ஜிஎஸ்டி, வரி சீர்திருத்தம் போன்ற எதிர்பார்க்கப்பட்ட உடனடி திட்டம் எதுவும் பட்ஜட்டில் இல்லை என தினகரன் தெரிவித்து உள்ளார்.