நளினிக்கு ஒரு மாதம் பரோல்

Publish by: --- Photo :


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தனது பரோல் வழக்கில் வாதாடிய நளினி தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தார். தான் குற்றவாளியாக்கப்பட்ட நிரபராதி என்று கூறினார். குழந்தையை பெற்று எடுத்தவுடன் பாலூட்டி பள்ளிக்கு அனுப்புவது உள்ளிட்ட எந்த பணிகளையும் செய்யவில்லை என்றும், திருமண ஏற்பாடுகளை செய்ய நீதிமன்றம் அனுமதிக்குமாறும் கூறினார்.

 

அப்போது சிறைவிதிகளின் படி தண்டனை குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 30 நாள்கள் மட்டுமே பரோல் வழங்க முடியும் என்றும், 7 பேரையும் விடுதலைக்கு பரிந்துரை செய்து உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து 30 நாட்கள் பரோல் வழங்கிய நீதிபதிகள் அவர் எங்கு? யாருடன் தங்குகிறார் ? உத்தரவாதம் அளிப்பவர் யார்? என்கின்ற விவரங்களை ஒரு வாரத்துக்குள் காவல் துறையிடம் தெரிவிக்கவும், காவல் துறை அடுத்த 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட இடங்கள், விபரங்களை ஆய்வு செய்து பரோல் வழங்கவும் உத்தரவிட்டனர்.

 

ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ, அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கவோ கூடாது என்றும் விதிகளை மீறினால், பரோலை ரத்து செய்ய நேரிடும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் , பரோல் காலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மனுதாரரிடம் அரசும், காவல் துறையும் கட்டணம் வசூலிக்ககூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Reply