கோவையில் அதிமுக மாஜி கவுன்சிலர் வீட்டில் 29 சிலிண்டர்கள் பறிமுதல் !வட்ட வழங்கல் அதிகாரிகள் அதிரடி.. !!

கருமத்தம்பட்டி பேரூராட்சியின் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 29 வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை உணவு வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

சூலூர் வட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான அலுவலர்கள் கருமத்தம்பட்டி,சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடைகள்,பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது,வீடுகளில் பயன்படுத்த கூடிய கேஸ் சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வந்ததை கண்டறிந்தனர்.

 

அவர்களிடம் விசாரணை நடத்தியதன் பேரில் கருமத்தம்பட்டி பேரூராட்சியின் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமியின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

அவரது வீட்டில் பொதுமக்களுக்கும்,வணிக நிறுவனங்களுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 29 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

 

மேலும்,கருமத்தம்பட்டி,சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரக்கடைகள்,உணவகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 13 வீட்டு உபயோக சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர்.மொத்தமாக 42 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர்கள் சூலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

 

கோவையில் முன்னாள் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் வீட்டில் 29 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply