திமுக ஆட்சியில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன…ஸ்டாலின் அறிக்கையாக அளிக்க தயாரா? -வானதி சீனிவாசன் விளாசல்!

மக்களை ஏமாற்றுவதற்காகவே தண்ணீர்  பிரச்சனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவில்  உறுப்பினர் சேர்க்கைக்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார். 8980808080 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுப்பதன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

 

கடந்த முறை பாஜகவில்  40 லட்சம் பேர் இணைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் 6ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கையை வாரணாசியில் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக வானதி சீனிவாசன் கூறினார்.

மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் மத்திய மாநில அரசாங்கம் ஒருபோதும் செயல்படுத்தாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

மக்களை ஏமாற்றுவதற்காகவே  காலி குடங்களை வைத்து கொண்டு ஸ்டாலின் தண்ணீர் பிரச்சனை குறித்து போராட்டம் நடத்துகிறார் என்று குற்றம்சாட்டிய வானதி சீனிவாசன், எத்தனை நீர்நிலைகள் திமுக ஆட்சியில்  தூர்வாரப்பட்டன என்பதை ஸ்டாலின் அறிக்கையாக அளிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நீர் பிரச்சனையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கட்சி என்று விமர்சித்த அவர்,  பாஜக தனி ஒரு நபருக்கோ குடும்பத்திற்கோ சொந்தமானது அல்ல என்றும் கூறினார்.


Leave a Reply