--- --:--:-- --

ஊழலைத் தடுக்க விஜய் அதிரடி அறிவிப்பு!

5

காவல் நிலையங்களின் தினசரி செலவினங்களைச் சமாளிக்கவும், அங்கு நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைமுறைகளைக் குறைக்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காவல் நிலையங்களுக்கான மாதாந்திர நிதி (Contingency Fund) பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

இது தொடர்பான அரசாணையை உள்துறை அமைச்சகம் அக்டோபர் 21, 2026 அன்று வெளியிட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும், அங்கு பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நிதி உயர்த்தப்பட்டுள்ளது:சிறு காவல் நிலையங்கள்: அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்கள் உட்பட மொத்தம் 1,169 சிறு காவல் நிலையங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த நிதி, ரூ. 3,750-ல் இருந்து ரூ. 30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

நடுத்தர காவல் நிலையங்கள்: 353 நடுத்தர காவல் நிலையங்களுக்கு மாதாந்திர நிதி ரூ. 6,000-ல் இருந்து ரூ. 40,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. பெரிய காவல் நிலையங்கள்: மெட்ரோ-1 மற்றும் மெட்ரோ-2 காவல் நிலையங்கள் உட்பட 395 பெரிய காவல் நிலையங்களுக்கு மாதாந்திர நிதி ரூ. 8,250-ல் இருந்து ரூ. 50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

இந்த நிதி உயர்வின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்காக 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் காவல் நிலையங்கள் எந்தவித சிரமமுமின்றித் தங்களது அன்றாடப் பணிகளைத் தங்குதடையின்றிச் செயல்படுத்த முடியும்.

 

 

ஊழலைத் தடுக்கும் நடவடிக்கை: காவல் நிலையங்களின் அன்றாடப் பணிகளுக்குத் தேவையான எழுதுபொருட்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், முந்தைய நிதி போதுமானதாக இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

 

 

போதுமான நிதி இல்லாத காரணத்தினால், தினசரி செலவுகளைச் சமாளிக்கக் காவல் நிலையங்கள் புகார்தாரர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களைச் சார்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மக்களிடம் பணம் வசூலிக்கும் முறைகளும், புகார்களும் எழுந்தன.இத்தகைய முறைகளைக் களைந்து, அரசு நிதியைக் கொண்டே அனைத்துச் செலவினங்களையும் மேற்கொள்ளச் செய்வதே இந்த நிதி உயர்வின் முக்கிய நோக்கமாகும்.

 

 

சிறப்புப் பிரிவுகளுக்கும் நிதி வழங்க பரிசீலனை: தமிழ்நாட்டில் குற்றப் பிரிவு-குற்றப் புலனாய்வுத்துறை (CB-CID), பொருளாதார குற்றப்பிரிவு (EOW), பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ATS), கியூ பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையங்கள், கடலோரப் பாதுகாப்புப் படை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு போன்ற காவல் நிலைய அந்தஸ்தைக் கொண்ட பல சிறப்புப் பிரிவுகள் இயங்கி வருகின்றன.

 

 

தற்போது இந்தப் பிரிவுகளுக்கு மாதாந்திர தற்செயல் நிதி எதுவும் வழங்கப்படுவது இல்லை. எனவே, இத்தகைய சிறப்புப் பிரிவுகளுக்கும் தலா ரூ. 30,000 மாதாந்திர நிதியை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, காவல்துறை இயக்குநருக்கு தமிழக அரசு தனிப் பரிந்துரை ஒன்றைச் சமர்ப்பிக்கக் கோரியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon