சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

அக்டோபர் மாதத்திற்குள்ளாக சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைக்கும் பணியில் குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் ஒத்துழைப்பு தேவை என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு உள்ளாக சென்னையில் 200 வார்டுகளில் தலா 1000 மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்ட மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தவிர செயல்படாமல் உள்ள மழை நீர் சேமிப்பு தொட்டிகளை சீர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதற்காக 200 வார்டுகளுக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் உதவி மற்றும் இணை பொறியாளர்கள், வரி வசூலிப்போர், சுகாதாரத்துறை ஊழியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்வதுடன் அமைப்பை நிறுவுவதற்கான தொழில் நுட்ப ஆலோசனைகளையும் அக்குழு வழங்கும்.

 

குடியிருப்போர் நலச்சங்ககளுடன் ஆலோசனை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அந்த குழுக்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டு கொண்டுள்ளார். அன்றாட பணிகளையும் தாண்டி மழை நீர் சேமிப்பு திட்ட இலக்கிற்காக உழைக்க வேண்டும் என்றும் குழுக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் சேமிப்பு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 10 லட்சம் துண்டு பிரசூரங்களும் விநியோகிக்கப்பட உள்ளன.


Leave a Reply