தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக கருத்து கூறியிருந்த கிரண் பேடி தமிழக மக்களை கோழைத்தனமானவர்கள், சுயநலமிக்கவர்கள் என்று கூறியிருந்தார்.

 

தான் வகிக்கும் அரசியல் சட்ட பொறுப்புக்கு பொருந்தாத விமர்சனத்தை முன் வைத்திருப்பதாக கிரண்பேடிக்கு திமுக கண்டனம் தெரிவித்து உள்ளது. பாதுகாப்பு பணியில் எத்தனையோ தமிழக வீரர்கள் வீர மரணம் அடைந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய மு.க. ஸ்டாலின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கபட்டாலும் உதவி செய்யும் காக்கும் கரமும், கருணை உள்ளமும் கொண்ட தமிழக மக்களை சுயநலமிக்கவர்கள் என்று கிரண் பேடி கூறியிருப்பது ஆணவத்தின் வெளிப்பாடு, ஆதிக்க மேலாண்மையின் அடையாளம் என்று விமர்சனம் செய்து இருக்கிறார்.

 

புதுச்சேரி அரசு நிர்வாகத்தை திட்டமிட்டு முடக்கி உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் குட்டு வாங்கியுள்ள கிரண் பேடிக்கு தமிழக அரசு பற்றியோ, தமிழக மக்கள் பற்றியோ கருத்து கூற எந்த விதமான தகுதியும், உரிமையும் கிடையாது என ஸ்டாலின் கூறியிருக்கிறார். கிரண் பேடியை குடியரசு தலைவர் உடனடியாக திரும்ப பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Leave a Reply