திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சிக்கலா?

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கோஷம் எழுப்பிய கராத்தே தியாக ராஜன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்? அதே கருத்தை வலியுறுத்திய கே.என்.நேரு மீது திமுக நடவடிக்கை எடுக்க வைப்பதற்கான யுத்தியா? மத்தியில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததுலிருந்தே காங்கிரசுக்கும், திமுகவிற்கும் இடையே உரசல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்த நிலையில் தான் திருநாவுக்கரசரை மேடையில் வைத்துக் கொண்டே வழக்கமாக போட்டியிடும் இடங்களை விடவே அதிகமான இடங்களில் திமுக போட்டியிடும் என கூறினார், உதயநிதி ஸ்டாலின். அந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசினாலும், உதயநிதி கோரிக்கைக்கு அவர் தந்த பதில் மௌனமே. அதனை தொடர்ந்து இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது என்கிற கேள்வியை கே.என். நேரு முன் வைக்க புதிய சர்ச்சை பற்றிக்கொண்டது.

 

அதற்கும் ஸ்டாலினின் பதில் மௌனமே. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்தது தான் நேருவின் பேச்சுக்கு காரணம் என சொல்லப்பட்டது. உடனே அவரை கட்சி தலைமை கூப்பிட்டு கண்டிக்க வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டார் தியாகராஜன்.

 

ஆனால் அதற்கும் ஸ்டாலினின் பதில் மௌனமே. இதற்கிடையில் திமுக காங்கிரஸ் கூட்டணியை நேருவால் கூட பிரிக்க முடியாது என்று கே.எஸ். அழகிரி பேச தொடங்கினார். காங்கிரஸின் தமிழக தலைவரே பேசிவிட்டதன் தண்ணீர் பிரச்சனைக்கான போராட்டத்தில் கே.என். நேரு தொடங்கி வைத்த சர்ச்சையை தண்ணீர் பிரச்சனைக்கான போராட்டத்தில் ஸ்டாலின் முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரிக்கும் ஸ்டாலினின் பதில் மௌனமே.

 

இதனாலேயே திமுக காங்கிரஸ் கூட்டணி விவகாரம் குறித்து வேண்டும் என்றே பேசாமல் தவிர்க்கிறாரா? ஸ்டாலின் என்கிற சந்தேகம் எழுகிறது. ஸ்டாலினின் இந்த மௌனம் இனியும் காங்கிரசால் திமுகவிற்கு பயன் இல்லை என முற்றிலும் கை கழுவதற்கு அர்த்தமா? அல்லது உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசிடம் பேரம் பேசுவதற்கான யுக்தியா? இந்த நிலையில் தான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்து விட்ட கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

 

கராத்தே தியாகராஜன் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஸ்டாலினின் மௌனத்தை கலைப்பதற்கான முயற்சியா? அல்லது கூட்டணி தொடர்வதாக இருந்தால் நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலினுக்கு கொடுக்கும் நெருக்கடியா? என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


Leave a Reply