பீகாரில் 150 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பிற்கு லிச்சி பழம் காரணம் என்ற சர்ச்சையால் சென்னையில் லிச்சி பழத்தின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. லிச்சி பழம் சாப்பிடுபவர்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குவது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவது போன்றே வட மாநிலங்களில் லிச்சி பழம் பிரபலம். அங்கு ஆண்டு தோறும் 32,000 ஹெக்டேரில் 3 லட்சம் டன் லிச்சி பழங்கள் விளைவிக்கப்படுவதாக தெரிவிக்கிறது புள்ளி விவரம்.
சிறந்த மருத்துவம் குணம் கொண்ட லிச்சி பழத்தை தினமும் உண்டால் இதயம் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் சென்னையிலும் இதற்கு வரவேற்பு உண்டு. லிச்சி பழ உற்பத்திக்கு பீகார் மாநில முஷாஃபர்பூர் மாவட்டம் பெயர் பெற்றது. அங்கு கடந்த ஒரு மாதத்தில் மூளை காய்ச்சலால் 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு லிச்சி பழமே காரணம் என கூறுகின்றனர். லிச்சி பழத்தை சாப்பிட்டவர்கள் உணவு எடுக்காமல் வெறும் வயிற்றில் தூங்கியுள்ளனர். அதனால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்து மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.2012, 2013 ஆம் ஆண்டிலும் பீகாரில் ஏராளமான சிறுவர்கள் பலியாகி உள்ளனர்.
அது குறித்து ஆய்வு நடத்திய நிபுணர்கள் லிச்சி பழத்தில் உள்ள நச்சு தன்மையை உறுதி செய்துள்ளனர். 2017 இல் இந்திய அமெரிக்க நிபுணர்கள் கூட்டு ஆய்விலும் லிச்சி பழம் சாப்பிட்ட குழந்தைகளின் உடலில் மெத்தலின் சைக்லோ ப்ரோஃபைல் கிளைசீன் என்ற வேதியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து உள்ளனர். லிச்சி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்று என்றாலும், அதனை சாப்பிட்ட பின் இரவு வேளைகளில் உணவு எடுக்காமல் தூங்குவதை தவிர்ப்பது நல்லது.