கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கைது

7ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் உள்ள கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள இரயில்வே மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்கக்கோரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் 500 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை சிங்கநல்லூரை அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் 23 கோடி ரூபாய் மதிப்பில் இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கியது. சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தாமல் பாலம் கட்டுமானப்பணி துவங்கியதால் உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த காரணத்தால் பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. 7 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும்,பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும் , எஸ். ஐ.எச்.எஸ் காலனி அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மேம்பாலம் கட்டும் பணி தாமதப்படுத்தபடுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாவதாகவும், விரைவில் பாலத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.திமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட பாலம் என்பதால அரசு இந்த பாலம் கட்டுவதில் அக்கறை காட்டாமல் இருப்பதாக குற்றம்சாட்டியவர்கள், சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களை அரசு தரப்பில் அழைத்து பேசி உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

 

15 நாட்களுக்குள் இரயில்வே மேம்பாலம் கட்டும்பணி துவங்காவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொண்டர்கள்
500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.பின்னர்,மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply