திருப்பூரில் கஞ்சா வழக்கு குற்றவாளி குத்திக்கொலை!! தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

Publish by: --- Photo :


திருப்பூரில், கஞ்சா வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்த ஆசாமி, நண்பர்களுக்குள் ஏற்பட்ட, ‘போதை’ தகராறில், கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் அடியில், தண்டவாளத்தையொட்டி, ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடப்பதாக நேற்று முன்தினம் காலை திருப்பூர் வடக்கு மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

வடக்கு இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.கொல்லப்பட்டவர், திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியை சேர்ந்த செபஸ்தியன், என்பதும் ரயில்வே கலாஸ் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. தற்போது, சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த அவர், நண்பர்களுடன் மதுபோதையில் ஏற்பட்ட பிரச்னையில், நெஞ்சு, காது உள்ளிட்ட பகுதியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது தெரியவந்தது. அவரிடம் ஆறு மொபைல்போன்கள் இருந்தன.

 

போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர் உமா ஆகியோர் சடலத்தை பார்வையிட்டு விசாரித்தனர். ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘செபஸ்தியன் கடந்த ஜனவரி மாதம், கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார். அவர் மீது பிக்பாக்கெட், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிந்தது. கொலை தொடர்பாக இருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும். குற்றவாளிகளை பிடிக்க, வடக்கு மற்றும் ரயில்வே போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் அமைத்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.


Leave a Reply