வாக்கு எண்ணும் பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

Publish by: இராமநாதபுரம் மகேந்திரன் --- Photo :


  • இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், பரமக்குடி சட்டமன்ற இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் வீராகவ ராவ் கூறும்போது-

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.18 இல் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணைய அறிவித்துள்ளபடிதேர்தல் வாக்கு எண்ணிக்கை மே23. காலை 8.00 மணி முதல் இராமநாதபுரம் அண்ணா பல்கலை., பொறியியல் கல்லூரியில்
நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்தும் வகையில் மாவட்ட
நிர்வாகம் மூலம் அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் நடைபெறும். பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பில் நடைபெறும்.

 

தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளை பொதுத்தேர்தல் பார்வையாளர்களும் கண்காணிக்கும் வகையில்
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணி பொறுத்தவரை காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் வாக்குகள்
எண்ணும் பணி தொடங்கப்படும். தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான
வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்
பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு
மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் 42 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவர்.

 

வாக்கு எண்ணிக்கை சுற்றுகளை பொறுத்தவரை அறந்தாங்கி, திருச்சுழி சட்டமன்ற தொகுதிகளில்
தலா 20 சுற்றுகள், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 22 சுற்றுகள், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில்
24 சுற்றுகள், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 25 சுற்றுகள், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 28
சுற்றுகள் என முறையே வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளன.

 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நிறைவு பெற்றவுடன் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரத்திலுள்ள ஒப்புகை வாக்குப்பதிவு சீட்டுகளை எண்ணும் பணிகள் நடைபெறும். இப்பணிகள் நிறைவு பெற்ற பின்னரே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைபேசி உள்ளிட்ட
எந்தவிதமான மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வதற்கு கட்டாயம் அனுமதி இல்லை.
தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தின் வெளி வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு படை பிரிவினர், உள்
வளாகத்தில் மாவட்ட காவல் அலுவலர்கள், வாக்கு எண்ணும் அறைகள் உள்ள வளாகத்தில் ஆயுதம் ஏந்திய
துணை ராணுவ படை வீரர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

வாக்கு எண்ணும் நாளன்று வாக்கு எண்ணிக்கை பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக பல்வேறு
துறை சார்ந்த அலுவலர்கள, காவல்துறை சார்ந்த அலுவலர்கள் என 3000-க்கும் மேற்பட்டோர்
ஈடுபடவுள்ளனர். அந்த வகையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையினை அமைதியான முறையில் நடத்திடும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.


Leave a Reply