கருத்து கணிப்பு முடிவால் மாயாவதி மனமாற்றம்? சோனியா, ராகுல் சந்திப்பை திடீரென கைவிட்டார்!!

கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக உள்ள நிலையில், அக்கட்சி தலைவர்களை இன்று சந்திக்க திட்டமிட்டிருந்த மாயாவதி, திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.

 

நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்பாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகின. இதில், பாரதிய ஜனதாவுக்கு மெஜாரிட்டியை விட கூடுதல் இடம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. இதில், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்படும் என்றும் கூறப்பட்டது.

 

இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்க மாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி எஸ்.சி மிஸ்ரா தெரிவித்துள்ளார். லக்னோவிலே மாயாவதி இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

 

கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு பாதகமாக இருப்பதால், அக்கட்சியுடனான சந்திப்பை மாயாவதி ரத்து செய்திருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை யோசிக்கலாம் என்று அவர் முடிவு செய்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


Leave a Reply