தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று கூறியிருப்பது, தமிழகத்தில் அதிக இடங்களை பிடிக்கும் என்று கருதப்படும் திமுக தலைமைக்கு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உடனடியாக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருக்காதோ என்று, திமுக தலைமை கவலையடைந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தற்போது அனைவரின் பார்வையும் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் பக்கம் திரும்பி உள்ளது. அதற்கு முன்னோட்டமாகநேற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வட இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்டன.
இதில் பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகளும், சொல்லி வைத்தார்போல் மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சிக்கு வரும்; தமிழகத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுக அணிக்கு 8-10 இடங்கள் கிடைக்கலாம் என்று தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் அதிக நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் என்ற தகவல் திமுகவுக்கு நல்ல செய்திதான் என்றாலும், 39 தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி நிச்சயம் என்று ஸ்டாலின் நம்பி கொண்டிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொல்லி வந்த நிலையில், சாதுர்யமான காய் நகர்த்தல்கள் மூலம் ஆட்சியை தக்க வைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றவாறே, இம்முறை அனைத்து தொகுதிகளையும் அள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திமுக களமிறங்கியது. தொடங்கத்திலேயே பாமகவை தங்களின் கூட்டணியில் சேர்க்காமல் கோட்டை விட்டார் ஸ்டாலின்.
அவரது நுட்பமற்ற செயல்பாடுகள், துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களுக்கே எரிச்சலை தந்தன. அதன் பிறகும் ஸ்டாலின் வகுந்த வியூகங்கள், அப்படியொன்றும் பெரிய தாக்கத்தை தருவனவாக இல்லை. மாறாக அதிமுக தரப்பு பாமக -தேமுதிவுடன் கரம் கோர்த்து, வலுவான கூட்டணியை அமைத்தது.
எவ்வாறு ஆயினும், தமிழகத்தில் 35 இடங்களுக்கு மேல் பிடித்தால், மத்தியில் காங்கிரஸ் அரசு அமையும் போது, நினைத்த இலாகாவுடன் அமைச்சர் பதவிகளை பெறலாம்; தமிழகத்தில் அதிமுக அரசை உடனே ஊதித்தள்ளலாம் என்றெல்லாம் ஸ்டாலின் மனக்கோட்டை கட்டியிருந்தார்.
ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்களை, அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. எந்த அலையும் வீசாத இந்த தேர்தலில், நிச்சயம் மத்தியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; மாநில கட்சிகளின் தயவில் தான் புதிய அரசு அமையும் என்று ஸ்டாலின் நம்பி வந்தார்.
அப்படி சூழல் ஏற்படும் போது, தேசிய அளவில் திமுக முக்கிய பங்கு வகிக்கும். நினைத்த காரியங்களை சாதித்துக் கொள்ளலாம்; தமிழகத்தில் உடனடியாக அரியணையில் அமரலாம் என்றெல்லாம் ஸ்டாலின் மனப்பால் குடித்து வந்தார்.
ஆனால், மீண்டும் மோடி என்ற தகவல், இந்த கனவில் மண்ணை போட்டுவிடுமோ என்று திமுக தலைமை கவலை கொண்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை அக்கட்சி தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை. மீண்டும் மத்தியில் பாஜக வந்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பதை இப்போதைக்கு நினைத்து பார்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்பது, திமுக தலைவர்களின் பெரிய கவலையாக உள்ளது.
தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட, அதிமுக அரசை கவிழ்த்து அரியணையில் அமருவது தான், தங்களுக்கான முழுவெற்றி என்று திமுக தலைவர்கள் கருதுகின்றனர். இது உடனடியாக நடக்குமா? எல்லாவற்றுக்கும் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும், காலமும் தான் பதில் சொல்ல வேண்டும்.