சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18இல் மக்களவை தேர்தலுடன், சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மக்களவை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும், வரும் 19ஆம் தேதி நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22இல் தொடங்கி, 29இல் முடிவடைந்து, மறுநாள் பரிசீலனைக்கு பின், கடந்த 2ஆம் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ்.முனியாண்டி (அ.தி.மு.க.), டாக்டர் சரவணன் (தி.மு.க.), மகேந்திரன் (அ.ம.மு.க.), சக்திவேல் (மக்கள் நீதி மய்யம்), ரேவதி (நாம் தமிழர்) உள்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூரில், வி.பி.கந்தசாமி (அ.தி.மு.க.), பொங்கலூர் பழனிசாமி (தி.மு.க.), சுகுமார் (அ.ம.மு.க.), மயில்சாமி (மக்கள் நீதி மய்யம்), விஜய ராகவன் (நாம் தமிழர்) உள்பட 22 பேர்; தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் மோகன் (அ.தி.மு.க.), சண்முகையா (தி.மு.க.), சுந்தரராஜ் (அ.ம. மு.க.), காந்தி (மக்கள் நீதி மய்யம்), அகல்யா (நாம் தமிழர்) உள்பட 15 பேரும் போட்டியிடுகிறார்கள்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வி.வி.செந்தில்நாதன் (அ.தி. மு.க.), வி.செந்தில்பாலாஜி (தி.மு.க.), சாகுல் அமீது (அ.ம.மு.க.), மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்), பா.க. செல்வம் (நாம் தமிழர்) உள்பட 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி.தினகரனும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசனும், அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த பிரசாரம், இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
இதையடுத்து, தொகுதிகளில் தங்கி இருக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும் 19ஆம் தேதி காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
அதேபோல், மக்களவைக்கு 7ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக பீகார் (8), ஜார்கண்ட் (3), மத்தியபிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), உத்தரபிரதேசம் (13), இமாசலபிரதேசம் (4), சண்டீகார் (1) என மொத்தம் 59 தொகுதிகளுக்கும், 19இல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்காளம் நீங்கலான, மற்ற 8 மாநிலங்களில் உள்ள 50 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.