ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகிவிட்டாரா? பதவியை குறிப்பிட்ட கல்வெட்டால் உருவானது சர்ச்சை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Special Arrangements


மக்களவை தேர்தல் முடிவு வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை, இப்போதே தேனி தொகுதி எம்.பி. என்று குறிப்பிட்டு கல்வெட்டு தயாரித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, பிரசித்திபெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே, காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலையமும் அமைந்திருக்கிறது. தேனி மாவட்டத்தை சேர்ந்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு நன்கொடை வழங்கி வந்திருக்கிறார்.

 

 

அதேபோல் குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்கு நன்கொடை வழங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் பெயரும் இடம் பெற்றுள்ளது. அத்துடன், ஓ.பி.எஸ். மகனும், தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் அவரது பதவியாக, தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இன்னும் மக்களவை தேர்தல் முடிவு வெளியாகவில்லை; அதற்கு முன்பாகவே வேட்பாளரான ரவீந்திரநாத் குமாரை எம்.பி. என்று குறிப்பிடப்பட்டுள்ளது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கல்வெட்டில், 16.05.2019 என்று நேற்றைய தேதியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இது, தேனியில் உள்ள மற்ற கட்சியினரை அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைய செய்துள்ளது; இதுகுறித்து தேர்தல் ஆணைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.