தண்ணீர் பிரச்சனையை விரைவில் அதிமுக அரசு தீர்க்கும்! சூலூர் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் உறுதி!!

Publish by: நமது நிருபர் --- Photo : -கோவை விஜயகுமார்


சூலூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து, கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செஞ்சேரிபுத்தூர், சுல்தான்பேட்டை, சூலூர் இடையர் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது:

 

அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூவரும் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள்.

 

 

அதிமுக கூட்டணி தெய்வ பக்தி கொண்ட கூட்டணி. திமுக கூட்டணி தெய்வம் இல்லை என கூறும் கூட்டணி. அதிமுக கூட்டணி 22 சட்டமன்ற தொகுதிகளிலும் மீண்டும் வென்று ஆட்சியை பிடிக்கும். மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க-வும், தமிழகத்தில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெறுவது உறுதி.

 

தேர்தல் முடிந்தவுடன் 2 ஆயிரம் ரூபாய் நலிந்தவர்களுக்கு நிச்சயமாக வழங்கப்படும். சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும். சுல்தான் பேட்டையில் தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்படும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் கொண்டு வரப்படும்.

 

திமுக ஆட்சியில் 10 – 12 மணி நேரமாக கடும் மின்வெட்டு நிலவி வந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மின்மிகை மாநிலமாக மாற்றியது. தற்போது கோடை காலம் என்பதால் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும் . டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நதிநீர் ஆணையம் சீரமைக்கப்பட்டு, தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் நிச்சயமாக பெற்று தரப்படும்.

 

திமுக, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால்,தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன், மூன்றாம் அணி என்ற தங்களது நிலைப்பாட்டில் இருந்து தவறி வருகிறது. அதிமுக கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று பேசினார்.

 

முன்னதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவை மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதியிலும் அரசுக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.

 

இப்பகுதி மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசித்திட்டம் எப்படி தங்களது ஆட்சியில் திட்டம் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, அதைப்போலவே ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் துவக்கப்படும் என்றார்.

 

இதில், முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.


Leave a Reply