இந்துக்களை கமல் தொடர்ந்து சீண்டி வந்தால், அவரது 67 ஆண்டு திருவிளையாடல்களை முன் வைப்பேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜ தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: காந்தியின் படுகொலையை எவரும் நியாயப்படுத்த முடியாது. அதேபோல், கோட்சேவை விடுவிக்க வேண்டும் என்று யாரும் போராடவில்லை. ஆனால், ராஜீவ்காந்தியை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்கள். யார் தீவிரவாதி?
கமலஹாசனை போல், 67 வயது வரை பெண்களை அரைநிர்வாணமாக வைத்து படம் எடுத்து சம்பாதித்து விட்டு, அரசியலுக்கு வந்து வேடம் போடுபவன் நான் அல்ல; நான் 7 வயதில் இருந்தே அரசியலில் இருக்கிறேன்; மக்களுக்காக போராடி இருக்கிறேன்.
காந்தி தென் ஆப்பிரிக்கா செல்லும் முன்பு, மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், பிற பெண்களை தவறாக பார்க்க மாட்டேன் என்று, தனது தாய்க்கு உறுதிமொழி தந்தார். அவற்றை கடைபிடிக்காத கமல், தன்னை காந்தியின் கொள்ளுப்பேரன் என்று சொல்லலாமா?
கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்துக்கள் பற்றி கமல் அப்படி பேசியிருக்கிறார். எனவே, அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களை தொடர்ந்து அசிங்கப்படுத்த நினைத்தால், அவரை தோலுரித்து காட்டுவோம். கமல்ஹாசனின் 67 ஆண்டுகால திருவிளையாடல்களை மக்கள் முன்பு வைப்போம் என்று, ஹெச். ராஜா கூறினார்.