கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் 18 க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.தற்போது இந்த வார்டு பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக விநியோகிக்கப்படும் குடிநீர் கோழி இறைச்சி கழிவுகள்
குடிநீரில் வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இதுகுறித்து கருமத்தம்பட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று விநியோகிக்கப்பட்ட குடிநீரிலும் கோழி இறகுகள் கலந்து வந்ததால் அப்பகுதி மக்கள் அந்த நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிதண்ணீர் வருவதாகவும், அவ்வாறு வரும் நீரில் கோழி கழிவுகள் வருவதுடன்,துர்நாற்றமும் வீசுவதால் தண்ணீரை குடிக்க முடியவில்லை எனவும் இதை குடிக்கும் பொது மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளதால் தற்போது இந்த நீரை பயன்படுத்தப்படாமல் சாலையிலேயே திறந்துவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் எனவும்,இல்லாத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிய நமது நிருபர் பேரூராட்சி செயல் அலுவலரை தொடா்பு கொண்டபோது, அழைப்பை எடுக்கவில்லை. பின்னர் வெகுநேரம் கழித்து அழைப்பில் வந்த பேரூராட்சி செயல் அலுவலர் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. புகார் வந்ததும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதில் அவ்வாறு எதுவும் இல்லை என தகவல் தெரிவித்தார்.