வாதாடிய வக்கீலுக்கே ‘அல்வா’ தந்த பவர் ஸ்டார்! ஆபாசமாக திட்டியதாகவும் போலீசில் புகார்

காசோலை மோசடி வழக்கில் தன்னை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞருக்கே, பணம் தராமால் மோசடி செய்ததாக, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு தனக்கு பில் -அப் கொடுத்து, தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர். சென்னை அண்ணா நகரை சேர்ந்த இவர், டாக்டர் என்று கூறிக் கொண்டு கிளினிக் நடத்தி வந்தார்.

 

சினிமா ஆசையும், விளம்பர மோகமும் ஆட்கொண்டதால், தன்னை பற்றி எப்போதும் ஊடகங்களில் பரபரப்பான செய்தி வர வேண்டும் என்று ஆர்வம் காட்டுபவர். ஆள் கடத்தல், மோசடி வழக்கு, கடத்தல் வழக்கு என்று நீதிமன்ற படிகளிலும் எப்போது ஏறி, இறங்கிக் கொண்டிருப்பவர். இம்முறை அரசியலிலும் குதித்து, மக்களவை தேர்தலில் சென்னையில் போட்டியிட்டார்.

 

இந்த நிலையில், மோசடி புகாரில் இருந்து காப்பாற்றிய வழக்கறிஞருக்கே, பணம் தராமல் மோசடி செய்ததாக, அவர் மீது புதியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

திருச்சி துறையூரைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கு அங்குள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், சீனிவாசனுக்கு ஆதரவாக வழக்கறிஞர் பாண்டி என்பவர் வழக்கை வாதாடி வருகிறார்.

 

இந்நிலையில், வழக்கறிஞர் பாண்டிக்கான கட்டணத்தைக் கொடுக்காமல் நடிகர் சீனிவாசன் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணத்தைக் கேட்ட போது தன்னை சீனிவாசன் ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்த ஆடியோ பதிவுகளுடன், மணப்பாறை போலீசில் ஆதாரத்துடன் வழக்கறிஞர் பாண்டி, புகார் கொடுத்துள்ளார்.


Leave a Reply