ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யும் வகையில், 2014இல் தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக, ராஜிவ் படுகொலையின் போது உயிரிழந்த 14 பேர்களில் மூன்று பேரின் குடும்பங்களை சேர்ந்த அப்பாஸ், ஜான் ஜோசப், மாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன், அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் நலனை மட்டுமின்றி, அச் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரின் மனநிலை மற்றும் சமூகம் குறித்தும் அக்கறை காட்டி இருக்க வேண்டும். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதும்; அவர்களை விடுதலை செய்வதும், குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்று, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏழு பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தமிழக ஆளுனரின் பரிசீலனையில் வழக்கு இருப்பதால் அவரே முடிவு எடுப்பார் என்று தெரிவித்துள்ளது.