பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் எடுக்கும் எந்தவொரு முடிவையும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரில் விடுதலைக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது; இந்த விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் வந்திருந்த , தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய, ஆளுநர் எத்தகைய முடிவையும் மேற்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய, எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்க ஆளுநருக்கு உரிமை உண்டு. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், அவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று எங்கள் கட்சியின் தலைவரோ அல்லது காங்கிரஸ் கட்சியினரோ எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
ஆளுநர் எடுக்கும் முடிவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு காங்கிரஸ் எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்காது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக கைதிகள் ஏராளமானோர் சிறையில் உள்ளனர். அவர்கள் விடுதலை குறித்தும் ஆளுநர் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அழகிரி கூறினார்.