ராணுவத்தை வைத்து அரசியல் செய்கிறார் மோடி! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


ராணுவம் என்பது தனி ஒருவருக்கு சொந்தமானது இல்லை; ஆனல், மோடி அதை வைத்து அரசியல் செய்வதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

 

காங்கிரஸ் ஆட்சியில் ஆறு முறை துல்லியத்தாக்குதல் நடந்தது என்ற கருத்தை விமர்சனம் செய்திருந்த பிரதமர் மோடி, வீடியோ கேம் அல்லது காகிதத்தில் தாக்குதல் நடத்தி இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.

 

இதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலடி தந்துள்ளார். இது குறித்து, டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், சர்ஜிக்கல் எனப்படும் துல்லிய தாக்குதல்களை வீடியோ கேம்களுடன் ஒப்பிட்டு மோடி பேசியுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய ராணுவத்தை இழிவு படுத்திவிட்டார்.

 

ராணுவம் என்பது, நாட்டுக்கு சொந்தமானது. தனி ஒரு நபருக்கு சொந்தமானது இல்லை. நமது படை வீரர்களை வைத்து நாங்கள் அரசியலில் ஈடுபட மாட்டோம்; ஆனால், மோடி அதைத்தான் செய்கிறார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முடியாத பயப்படும் பிரதமரை இப்போது தான் பார்க்கிறேன்.

 

எங்களது ஆய்வின்படி, பாரதீய ஜனதா மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்துவிடும் என்பது உறுதியாகிவிட்டது. தீவிரவாதி மசூத் அசாரை, பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது யார்? காங்கிரஸ் ஒருபோதும் பயங்கரவாதிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது இல்லை என்று ராகுல் தெரிவித்தார்.