தமிழகத்தை பரபரப்பாக்கி வரும் ராசிபுரம், பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் அமுதவள்ளி, வயது 50. இவர், தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொண்டு நிறுவனங்கள், சில மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்து, குழந்தையை வாங்கி, ஆண் குழந்தையை ரூ. 4 லட்சம், பெண் குழந்தை எனில் ரூ. 3 லட்சத்திற்கு விற்று வந்ததாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து,அனைத்து மகளிர் போலீசில், சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி, 2012 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும் தெரிய வந்தது.
அதன்பிறகு தான், குழந்தை விற்பனை “தொழிலில்” அவர் இறங்கியுள்ளார். வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பேறுக்காக ஏங்கும் தம்பதிக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து, ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இப்பகுதி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் விவரம் பற்றிய பதிவேடுகள் ஆராயப்பட்டு வருகிறது. அத்துடன், அமுதாவின் வங்கிக் கணக்குகளில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனை குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் இருவரை போலீஸ் கைது செய்தனர். கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டை சேர்ந்த செவிலியர் பர்வின் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முருகேசனை கொல்லிமலைக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறனர்.
இதற்கிடையே, நேற்று கைதான அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் இன்று, ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இவர்களிடம் நடக்கும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராசிபுரம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.