பெற்றோர் என்னை கொடுமைப்படுத்துகின்றனர்; பாரில் ஆட வைத்து காசு பார்க்கின்றனர் என, சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் கேண்டி, பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு கேண்டி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது அம்மா விஜயலட்சுமி, சென்னை கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர். என்னுடைய அம்மா, அப்பா இருவருவே என்னை கட்டாயப்படுத்தி, ஒரு ஆண்டாக துபாயில் உள்ள பாரில் ஆட வைத்து பணம் சம்பாதித்து வந்தனர்.
இதில் எனக்கு அதில் விருப்பமோ, உடன்பாடோ இல்லை. எனவே, அங்கிருந்து வெளியேறி என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன். கடந்து 23.04.2019 அன்று எனது பெற்றோர், அடியாட்களுடன் வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து சென்றனர்.
அப்பகுதி மக்கள் தான், அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றி, காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பிறகு மருத்துவமனையில் சேர்த்தனர். என்னுடைய அண்ணனின் கடையையும் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

எனது அம்மா, காவல் ஆய்வாளர் என்பதால் அவரை பற்றி எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அவர் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனது உயிர்க்கு ஆபத்து இருக்கிறது. அவர்களிடம் இருந்து என்னையும், என் அண்ணனின் குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பெற்றோர் மீது, அதுவும் காவல் ஆய்வாளராக உள்ள தாய் மீது மகளே இத்தகைய புகார் கூறியிருப்பது காவல் துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.