கட்சிக்கு விரோதமா நாங்க எப்ப செயல்பட்டோம்? கள்ளக்குறிச்சி, விருதாச்சலம் எம்.எல்.ஏ.க்கள் கேள்வி

கட்சிக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு மற்றும் விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதற்காக எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, சட்டப்பேரவை தலைவர் தனபாலிடம், அதிமுக கொறடா ராஜேந்திரன் மனு அளித்தார்.

 

தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில், அதிமுக தலைமை இந்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், டி.டி.வி.தினகரன், கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி ஆகியோரின் எம்.எல்.ஏ பதவியை பறிக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், அதிமுக கொறடாவின் கோரிக்கை குறித்து, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் கூறுகையில்,’இரட்டை இலைக்கு ஆதரவாகவே இருப்போம், கட்சி விரோத நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. உள்நோக்கத்துடன் எங்கள் மீது கொறடா ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்,’என்றார்.

 

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு கூறும் போது, ‘கட்சி விரோத செயலில் ஈடுபடவில்லை, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டால், அதற்கு விளக்கம் தருவோம். சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் எனது முடிவு இருக்கும்’ என்றார்.


Leave a Reply