தமிழகத்தின் முக்கிய நகரங்களை தாக்க சதித்திட்டம்? 19 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக திடுக் தகவல்

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

 

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பிறகு தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், முக்கிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கும் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்தோடு பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, கர்நாடக போலீசார், தமிழக போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் தமிழக போலீசாருக்கு பெங்களூரு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். ரயில்களில் குண்டு வைக்க அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தமிழக காவல்துறைக்கு பெங்களூரு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

இந்த திடுக்கிடும் தகவல், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply