தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் என்பது வதந்தி! பொய் தகவல் பரப்பிய ஓய்வு பெற்ற ராணுவவீரர் கைது

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக, பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் தந்ததாக, ஓய்வு பெற்றா ராணுவவீரரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

 

தமிழகத்தின் நாச வேலை நிகழ்த்தும் நோக்கத்தோடு, 19 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக, தமிழக போலீசாருக்கு கர்நாடக போலீசார் நேற்று கடிதம் அனுப்பி எச்சரிக்கை செய்திருந்தனர். ரயில்களில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாசவேலைகளை நிகழ்த்த, அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கர்நாடக போலீசார் தெரிவித்திருந்தனர்.

 

தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில், தமிழக போலீசாருக்கு கர்நாடக போலீசார் இந்த கடிதத்தை அனுப்பினர். ஆனால், கர்நாடக போலீசாருக்கு வந்த தகவலே தவறானது என்று தற்போது தெரிய வந்துள்ளது.

 

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொன்னது பொய் என்றும், அந்த தகவலை அளித்தவர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுந்தரமூர்த்தி என்று தெரிய வந்துள்ளது.

 

தொலைபேசி எண்ணை வைத்து சுந்தரமூர்த்தியை கர்நாடக போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர். இவரது மகன், கார்கில் போரின் போது கொல்லப்பட்டதும், அதன் பிறகு இவருக்கு மனநிலை சரியில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Leave a Reply