தமிழ்நாடு தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும். கருணாநிதியை தமிழக அரசு அவமதித்தது என்று சேலம் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார். கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் பேசியதை தொடர்ந்து சேலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:
கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல; தமிழர்களின் ஓங்கி ஒலித்த குரலாக இருந்தார். தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியதன் மூலம், தமிழர்களையே அவமானப்படுத்தியது. தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும்; நாக்பூரில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று பாஜகவினர் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வால் இளம் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு தேவையா தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருக்கிறோம்.
விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஆதரவு சொல்லக்கூட பிரதமர் மோடிக்கு மனமில்லை. விவசாயிகளை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்பதற்குகூட பிரதமருக்கு நேரமில்லை. நாங்கள் மக்களின் குரலை கேட்கிறோம்; கருத்து பரிமாற்றங்களை செய்கிறோம். மத்தியில் உள்ள அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது.
நாட்டில் உள்ள 20% ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72000 கிடைப்பது உறுதிசெய்யப்படும். மத்திய அரசு அலுவலக பணிகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்வோம் என்றார்.
ஸ்டாலின் குற்றச்சாட்டு
முன்னதாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ; பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ. திராவிட இயக்கத்தின் எண்ணங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கிறது.
ஏழைத் தாயின் மகனின் ஆட்சியில், விஜய் மல்லையா, நிரவ் மோடி கோடி கோடியாக கொள்ளையடித்து செல்கின்றனர். பிரதமர் மோடி காவலாளி அல்ல களவாணி என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.