பி.எம். நரேந்திரமோடி சினிமாவுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

 

ஓமங்க் குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.  மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து, பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவரது அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

 

இப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட்டால், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலை உருவாகும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல்  அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் தந்தனர்.

 

இதற்கிடையே, இப்படம் வெளியிட தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தா ன் முடிவு எடுக்கும் என மும்பை உயர்நீதிமன்றம், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியன தெரிவித்தன.

 

இந்நிலையில், மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது  என்று, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேபோல், என்.டி.ஆர்.லட்சுமி, கே.சி.ஆர். குறித்த திரைப்படங்களுக்கும்  தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply